Friday, April 29, 2011

குருப்பெயர்ச்சி பலன்கள் 2011 (ரிஷபம்)


ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ஆடம்பர வாழ்க்கை வாழ்வதில் அலாதி பிரியம் கொண்ட ரிஷப ராசி நேயர்களே! குரு பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு விரய ஸ்தானமான 12-ஆம் வீட்டில் 8-5-2011 முதல் 17-5-2012 வரை சஞ்சாரம் செய்யவுள்ளார். இந்த குரு சஞ்சாரத்தால் பண வரவுகளில் திருப்தியான நிலை இருந்தாலும் எதிர்பாராத வீண் விரயங்களை எதிர்கொள்ள நேரிடும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. சர்ப்ப கிரகங்களான கேது ஜென்ம ராசியிலும், ராகு 7-ஆம் வீட்டிலும் 6-6-2011 முதல் சஞ்சரிக்க இருப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால், கணவன்- மனைவி விட்டுக் கொடுத்து நடந்துகொள்வதும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக் கொள்வதும் உத்தமம். உங்கள் ஜென்ம ராசிக்கு தர்மகர்மாதிபதியான சனி பகவான் 15-11-2011 வரை பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும், அதன் பின்னர் 6-ஆம் வீட்டுக்கு செல்லவிருப்பது அற்புதமான அமைப்பாகும். இதனால் வாழ்வில் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் அனைத்தும் ஓரளவுக்கு மறைந்து படிப்படியான முன்னேற்றம் உண்டாகும். நினைத்ததை நிறைவேற்ற முடியும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் தடைகள் நிலவினாலும் மற்ற எல்லா முயற்சிகளிலும் வெற்றியினைப் பெறு வீர்கள். பெரிய அளவிலான முதலீடுகள் செய்யும் காரியங்களைத் தவிர்ப்பது நல்லது.

ஆரோக்கியம்:

உங்கள் தேக ஆரோக்கியம் சுமாராகவே காணப்படும். மனைவி மற்றும் பிள்ளைகள் நலமும் சீராகவே இருக்கும். குடும்பத்தில் இருந்த மருத்துவச் செலவுகள் படிப்படியாகக் குறையும். சிலருக்கு வயிற்றுக் கோளாறு, கால்களில் காயம் போன்றவை ஏற்படலாம். பெரிய கெடுதல் இருக்காது.

பொருளாதார நிலை:

பொருளாதார வகையில் படிப்படியான முன்னேற்றம் ஏற்படும். உங்கள் பழைய கடன்கள் ஓரளவு குறையும். பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது ஜாமீன் கொடுப்பதை முற்றிலும் தவிர்ப்பது உத்தமம். வெளிவட்டாரப் பழக்க- வழக்கம் ஓரளவு நற்பலனைக் கொடுக்கும்.

குடும்பம்:

கணவன்- மனைவி இடையே சிறுசிறு சண்டை, சச்சரவுகள் ஏற்பட்டு மறையும்; கெடுதல் இருக்காது. பணப் பற்றாக்குறை ஏற்பட்டாலும் நெருங்கிய உறவினர்களின் உதவியால் சமாளிப்பீர்கள். நண்பர்கள் ஓரளவு அனுகூலமாக இருப்பார்கள். குடும்பத்தில் புதிய முயற்சிகளை சிறிது தள்ளி வைப்பது உத்தமம்.

உத்தியோகஸ்தர்களுக்கு:

உத்தியோகத்தில் வேலைப் பளு கூடினாலும் வருமான உயர்வு ஏற்படும். சிலருக்கு புதிய வேலை வாய்ப்பில் தாமதமான பலன் ஏற்படும். அதிகாரிகள் சக ஊழியர்களை அனுசரித்துப் போனால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்; சிலருக்கு பணி நிரந்தர மாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் ஏற்பட்டாலும் ஆதாயமும் உண்டாகும்.

தொழிலாளர்களுக்கு:

தொழிலில் வேலைப் பளு சற்று குறையும். உடல்நலம் படிப்படி யாகத் தேறும். கடன் பிரச்சினைகள் குறைந்து மன நிம்மதி உண்டாகும். தொழிலாளி- முதலாளி இடையே சிறிது ஒற்றுமை குறையும். கூட்டுத் தொழில் ஓரளவு லாபம் உண்டாக்கும்.

பெண்களுக்கு:

உங்கள் தேகநலம் சீராகவே இருக்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் தாமத பலனை உண்டாக்கும். புத்திர வழியில் சுபச் செலவுகள் ஏற்படும். தாய் வழியில் நற்பலன் கிடைக்க தடை, தாமதம் உண்டாகும்.

கலைஞர்களுக்கு:

மறைமுக எதிர்ப்புகள் இருந்தாலும் எதையும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். நல்ல தரமான வாய்ப்புகள் தாமதித்து அமையும். வருமானம் திருப்தியாக இருக்காது. இசைத் துறையில் சிலர் புகழ் பெறுவர். ரசிகர்களின் ஆதரவு சுமாராகவே இருக்கும்.

விவசாயிகளுக்கு:

விளைச்சல் சுமாராகவே இருக்கும். புழு, பூச்சிகளால் தொந்தரவு ஏற்படும். கால்நடைகளால் ஓரளவு அனுகூலம் ஏற்படும். பெரிய அளவிலான விவசாயப் பணிகளை சிறிது காலம் கழித்து தொடங்கினால் நற்பலன் ஏற்படும்.

இளைஞர்களுக்கு:

மற்றவர்களுக்கு நீங்கள் வாக்குறுதி கொடுப்பது நல்லதல்ல. படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்க தடை ஏற்படலாம். எதிலும் கவனம் தேவை. குடும்பத்தில் உடன்பிறப்பு வழியிலும் சக நண்பர்கள் வகையிலும் உதவியும் ஒத்துழைப்பும் இருக்கும்.

மாணவர்களுக்கு:

மாணவர்கள் கல்வியில் சற்று முன்னேற்றம் அடைவார்கள். மேற்கல்விக்காக எடுக்கும் முயற்சியில் சிறிது தாமதம் ஏற்படும். புதிய நண்பர்களுடன் பழகும்போது கவனம் தேவை. வாகனங்களில் செல்லும்போது நிதானம் தேவை.

குரு அஸ்வினி நட்சத்திரத்தில் கேது சாரத்தில்
8-5-2011 முதல் 17-7-2011 வரை சஞ்சாரம்

உங்களின் தேக ஆரோக்கியம் சுமாராக இருக்கும். சிலருக்கு தாய் வழியில் சில உபாதைகள் உண்டாகி, பின்னர் நலமடையும். உறவி னர்கள் வருகையால் சற்றே நற்பலன்களும் எதிர்பார்த்த உதவியும் கிட்டும். வெளிவட்டார பழக்கத்தின் மூலம் உங்கள் மதிப்பும் அந்தஸ்தும் உயரும்; நண்பர்கள் உதவுவார்கள். எதிர்பார்த்த பண வரவுகள் கிடைக்கும். அசையா சொத்துகளின்மேல் செலவுகள் ஏற்பட்டாலும் லாபமாகவே ஏற்படும். செய்யும் தொழில் சிறப்பாகவே இருக்கும். வியாபாரம் நன்றாக நடைபெறும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு தாமதமாக அமையும். அரசியல்வாதிகளுக்கு சற்று மந்தமான நிலை ஏற்பட்டாலும் கெடுதியில்லை. மாணவர்களின் கல்வி சீராகவே நடைபெறும். கலைஞர் களுக்கு போதிய வாய்ப்புகள் மூலம் தன வரவுகள் இருக்கும்.

குரு பரணி நட்சத்திரத்தில் சுக்கிரன் சாரத்தில்
18-7-2011 முதல் 30-8-2011 வரை சஞ்சாரம்

இக்காலத்தில் சற்று சோதனையான பலன்களை உண்டாக்கும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். மனைவி மற்றும் புத்திர வழியிலும் செலவுகள் உண்டாகும். உறவினர்களின் வருகை மூலமும் செலவுகள் உண்டாகும். சமயத்தில் நண்பர்கள் உதவி கிட்டாது. பழைய கடன்கள் தொல்லை தரும். வியாபாரத்தில் மந்த மான நிலை நீடித்து பொருள் தேக்கமும் பண வரவுகளில் தடை, தாமதமும் உண்டாகும். கூட்டுத் தொழிலில் மனக் கவலைகள் தோன்றும். செய்யும் தொழிலிலும் சரிவர கவனிக்க முடியாத நிலை ஏற்பட்டு உற்பத்தி குறையும். மாணவர்களுக்கு கல்வியில் கடுமை யாக உழைக்க வேண்டியிருக்கும். திருமணம் போன்ற சுப காரியங் களில் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு தடையாகும். பயணங் களில் நற்பலன் ஏற்படாது; எச்சரிக்கை தேவை.

குரு வக்ர கதியில்
31-8-2011 முதல் 25-12-2011 வரை சஞ்சாரம்

இக்காலத்தில் சுமாரான பலன்களே உண்டாகும். உடல் நிலையில் சிற்சில உபாதைகள் ஏற்பட்டு அடிக்கடி தொல்லைகள் தரும்; ஆனால் கெடுதி ஏற்படாது. பண வரவுகள் சகஜமாகும். கூட்டுத் தொழிலில் சற்று கவனம் செலுத்த வேண்டும். வியாபாரம் சிறப் பாகவே நடைபெறும். லாபம் சற்று சுமாராகவே இருக்கும். கமிஷன் ஏஜென்சி, காண்ட்ராக்ட் போன்றவற்றில் சுமாரான லாபம் அடைய முடியும். கொடுக்கல்- வாங்கலில் சிக்கல்கள் ஏற்படாது. குடும்பத்தில் கணவன்- மனைவி உறவு திருப்திகரமாகவே இருக்கும். திருமணம் போன்ற சுபகாரியங்களில் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டாலும் தடையின்றி நடைபெறும். மாணவர்கள் கவனத்துடன் கல்வி கற்றால் சிறப்பான மதிப்பெண்களைப் பெற முடியும். விவசாயிகளுக்கு சுமாரான விளைச்சல் ஏற்படும்.

குரு அஸ்வினி நட்சத்திரத்தில் கேது சாரத்தில்
26-12-2011 முதல் 2-3-2012 வரை சஞ்சாரம்

இக்காலத்தில் உங்களின் கஷ்டங்கள் யாவும் குறைந்து நன்மை உண்டாகும். உடல்நலம் சிறப்பாகவே அமையும். உடல் உபாதைகள் நீங்கி புதுப்பொலிவுடன் திகழ முடியும். மனைவி, குழந்தைகள் சிறப் பான நலத்துடன் காணப்படுவார்கள். புத்திர பாக்கியம் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை உருவாகும். உறவினர்கள் வருகையால் நற்பலனும் உதவியும் ஏற்படும். நண்பர்கள் மூலம் புதிய திட்டங்களில் வெற்றி கிட்டும். கூட்டுத் தொழில் சிறப்பாகவும் லாப கரமாகவும் நடைபெறும். வியாபாரம் அபிவிருத்தி அடையும். சுபகாரியங்களில் இருந்த இடையூறுகள் உடனடியாக விலகி சுபமாக நடைபெறும். அரசியல்வாதிகளுக்கு பெயர், புகழ் யாவும் கூடும். மாணவர்கள் பொதுத் தேர்வுகளில் சிறப்பான மதிப்பெண் களைப் பெற்று தாய்- தந்தையரைப் பெருமைப்படுத்துவார்கள். கலைஞர்களுக்கு அசையா சொத்து சேரும். புதிய வாய்ப்புகளும் ஏற்படும்.

குரு பரணி நட்சத்திரத்தில் சுக்கிரன் சாரத்தில்
3-3-2012 முதல் 2-5-2012 வரை சஞ்சாரம்

உங்கள் தேகநலன் ஓரளவு சுமாராகவே இருக்கும். உஷ்ண சம்பந்தமான சில கோளாறுகள் ஏற்பட்டு மறையும். புத்திரர்கள் வழியில் மருத்துவச் செலவுகள் குறையும். மனைவி உடல் நலம் நல்ல ஆரோக்கியமாக இருக்கும். உறவினர்களின் வருகையால் உதவி கள் கிட்டும். வரவுகள் ஓரளவு ஏற்பட்டு மனத் திருப்தி உண்டாகும். கடன்கள் குறையும். கணவன்- மனைவிக்குள் சிறுசிறு கருத்து வேறு பாடுகள் நிலவினாலும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. செய்யும் தொழிலில் சற்று முன்னேற்றமான நிலை தென்படும். கூட்டுத் தொழில் சுமாராக நடந்து லாபம் ஏற்படும். வியாபாரத்தில் சற்று மந்தமான நிலை நிலவும். அரசியல்வாதிகளுக்கு ஆதரவு சற்றே குறையும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முயற்சி மேற்கொள்ள நேரிடும். கலைஞர்கள் ஒப்புக்கொண்ட படவாய்ப்பு களை மந்தமாகவே செயல்படுத்துவார்கள்.

குரு கிருத்திகை நட்சத்திரத்தில் சூரியன் சாரத்தில்
3-5-2012 முதல் 17-5-2012 வரை சஞ்சாரம்

உங்களின் உடல்நிலையில் உபாதைகள் உண்டாகும். தேவை இல்லாத அலைச்சல்களும் அவசியமில்லாத பொருட்செலவுகளும் ஏற்படும். புத்திரர், மனைவி வழியிலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். உறவினர்களின் வருகையால் செலவுகளும் கலகமும் ஏற்படும். வண்டி வாகனங்களும் பழுது அடைந்து செலவு தரும். அசையா சொத்துகளின்மேல் செலவுகள் ஏற்படும். தொழில்ரீதியாக போராட்டங்களும் சமாளிக்க முடியாத நஷ்டமும் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. கடன்கள் தொல்லை தரும். அதிக முதலீடுகளையும் புதிய முயற்சிகளையும் கைவிடுவது உத்தமம். மாணவர்கள் மந்தமான நிலையில் காணப்படுவார்கள். விவசாயிகளுக்கு பயிர் நன்றாக விளையாது. அரசியல்வாதிகளின் பெயர், புகழ் யாவும் சற்று குறையும்.

கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு:

குடும்ப வாழ்வில் சந்தோஷம் குறையும். அடிக்கடி கருத்து வேறு பாடுகள் உண்டாகும். புத்திரர்களால் சண்டை, சச்சரவுகள் உண்டாகும். உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. எந்த புதிய முயற்சியிலும் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்ததைவிட லாபம் குறையும். அரசியல் வாதிகள், மாணவர்கள் எதிலும் கவனமாகச் செயல்பட வேண்டும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு:

உங்களுக்கு தொழிலில் நிம்மதிக் குறைவு, பொருளாதாரரீதியில் சோதனைகள் உண்டாகும். பிறருக்கு கடன் கொடுப்பது, ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்க்கவும். கணவன்- மனைவி ஒற்றுமை சிறிது பாதிக்கும். உத்தியோகத்தில் வேலைப் பளு கூடும். பெண்கள் எதிர்பார்க்கும் சுப காரியத்தில் தடை, தாமதம் ஏற்படும். எந்தக் காரியத்தையும் தடையுடன் எதிர்கொள்ள நேரிடும். எதிலும் மிகவும் கவனமாகச் செயல்படுவது உத்தமம்.

மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு:

செய்யும் தொழிலில் போட்டி, பொறாமைகள் ஏற்பட்டாலும் எதையும் சமாளித்து ஏற்றம் காண்பீர்கள். குடும்பத்தில் வரவுக்கேற்ற செலவு ஏற்படுவதால் சேமிக்க முடியாது. புத்திர வழியில் வீண் மனக்குழப்பம் ஏற்பட்டு விலகும். அரசியல்வாதிகளின் பெயர், புகழ் சற்று குறையும். கூட்டுத் தொழிலில் நிதானம் தேவை. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளில் கவனமாகச் செயல்பட வேண்டும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை

அதிர்ஷ்ட தேதி: 7, 10, 16, 18, 24.
அதிர்ஷ்ட கிழமை: புதன், சனி.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெள்ளை.
அதிர்ஷ்ட கல்: வைரம்.
அதிர்ஷ்ட திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்ட தெய்வம்: லட்சுமி.

பரிகாரம்:

இந்த குருப்பெயர்ச்சியின் மூலம் குரு பகவான் விரய ஸ்தானமான 12-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால், வியாழக்கிழமைகளில் விரத மிருந்து குரு பகவானுக்கு மஞ்சள் நிற ஆடையும், கொண்டைக் கடலை மாலையும் சாற்றி, நெய் தீபமேற்றி, மஞ்சள் நிற பூக்களால் அர்ச்சனை செய்வது- ஏழை அந்தணர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நல்லது. இதுவரை 8, 2-ல் சஞ்சரித்த ராகு- கேது வரும் 6-6-2011 முதல் ஜென்ம ராசியில் கேதுவும் 7-ல் ராகுவும் சஞ்சரிக்க இருப்பதால் அம்மன் வழிபாடு, விநாயகர் வழிபாடு செய்வது, சர்ப்பசாந்தி செய்வது உத்தமம்.

No comments: