விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
எந்தவொரு காரியத்திலும் இருவிதமான ஆதாயங்களை அடைய நினைக்கும் விருச்சிக ராசி நேயர்களே! குரு பகவான் வரும் 8-5-2011 முதல் 17-5-2012 வரை ருண ரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் தேவையற்ற பிரச்சினைகள், வம்பு, வழக்குகளை சந்திப்பீர்கள். முற்பாதியில் சனி 11-ஆம் வீட்டில் பலமாக சஞ்சாரம் செய்வதால் எதிலும் எதிர்நீச்சல் போட்டாவது ஏற்றத்தை அடைவீர்கள். எடுக்கும் காரியங்களிலும் வெற்றி கிட்டும். 6-6-2011-ல் ஏற்படவிருக்கும் சர்ப்பகிரக மாற்றத்தால், ராகு ஜென்ம ராசியிலும் கேது 7-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யவுள்ளனர். இதனால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகளும், கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகளும் உண்டாகும். இது மட்டுமின்றி, 15-11-2011 முதல் உங்களுக்கு ஏழரைச் சனியும் தொடங்கவுள்ளது. இதனால் எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்துச் செயல்படுவதும், தொழில், வியாபாரம் போன்றவற்றில் புதிய முயற்சிகளில் கவனமுடனிருப்பதும் உத்தமம். உத்தியோகஸ்தர் களுக்கு தேவையற்ற இடமாற்றமும் வீண்பழிச் சொற்களை சுமக்கக் கூடிய சூழ்நிலையும் உண்டாகும். கொடுக்கல் - வாங்கலிலும் வீண்பிரச்சினைகளைச் சந்திப்பீர்கள். மனைவி, பிள்ளைகளால் மருத்துவச் செலவுகள் ஏற்படும்.
ஆரோக்கியம்:
உங்கள் ஆரோக்கியம் அடிக்கடி பாதிக்கும். கவனமாக இருக்கவும். உங்கள் குடும்பத்தில் மனைவியின் உடல்நிலையும் பாதிக்கும். வீண் மருத்துவச் செலவுகள் ஏற்படும். சரியான உறக்கமில்லாத நிலைகள் உண்டாகும். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது உத்தமம்.
பொருளாதார நிலை:
சரிவும் சங்கடமும் பெருகிக் காணப்படும். எதிர்பார்க்கும் தகவல்களில் அனுகூலமற்ற பதிலை அடைவீர்கள். முயற்சிகள் சாதகமற்று எதிர்மறைப் பலன்களை உண்டாக்கும். கொடுக்கல் - வாங்கலைத் தவிர்ப்பது உத்தமம். புதிய கடன்கள் வாங்கும் நிலை உண்டாகும்.
குடும்பம்:
கணவன் - மனைவி இடையே சிறுசிறு சண்டை, சச்சரவுகள் ஏற்படும். சந்தோஷம் இருக்காது. வீண் வாதங்களும் பிடிவாதங்களும் சங்கடத்தைக் கொடுக்கும். கடன் தொல்லை ஏற்படும். புத்திர வழியில் வீண் மனக்குழப்பம் ஏற்பட்டு விலகும். புத்திரர்களால் குடும்பத்தில் ஒரு நன்மையும் ஏற்படாது.
உத்தியோகஸ்தர்களுக்கு:
எதிர்பாராத சிக்கல்கள் ஏற்படும் என்பதால் நெருங்கியவர்களிடம் எச்சரிக்கை தேவை. மேலதிகாரிகளின் ஆதரவுகள் குறையும். எப்போது பார்த்தாலும் கடுகடுப்பாகக் காணப்படுவீர்கள். உடல்நலமும் ஒத்துழைக்காது. வேலை தேடுபவர்களுக்கு நிலையான வேலை அமையாது.
தொழிலாளர்களுக்கு:
செய்கின்ற தொழிலில் திடீர் சரிவு, மந்த நிலை உண்டாகும். எதிலும் நிதானமாகவும் முன்எச்சரிக்கையுடனும் செயல்படுபவதன் மூலம் வரக்கூடிய ஆபத்துகளைத் தவிர்க்கலாம். புது முயற்சிகள் தடையுடன் நிறைவேறும்.
பெண்களுக்கு:
உடல்நலம் பாதிக்கும். வயிற்றுக் கோளாறுகளும் பித்த சம்பந்த மான நோயும் தோன்றிடும். இதனால் மருத்துவச் செலவுகள் இருக்கும். திருமணமானவர்களுக்கு குடும்ப வாழ்வில் நிம்மதி இருக் காது. கணவன் - மனைவி ஒற்றுமை சுமாராக இருக்கும். திருமணம் போன்ற சுப காரியம் நடைபெற தடை, தாமதம் உண்டாகும்.
கலைஞர்களுக்கு:
உங்களுக்கு தொழிலில் கடும் போட்டி உண்டு. அதை மிகவும் எளிதாக முறியடிக்கும் வல்லமையும் பெற்றிருப்பீர்கள். செல்வம், செல்வாக்கு சுமாராகவே இருக்கும். மக்கள் மத்தியில் உங்கள் புகழ் சற்று குறையப் பெறும். பொதுவாக எதிர்நீச்சல் போட்டு ஏற்றம் பெறும் அமைப்பைப் பெறுவீர்கள்.
விவசாயிகளுக்கு:
உங்களுக்கு விளைச்சல் குறைவாக இருக்கும். சிலருக்கு விவசாயக் கருவிகள் பழுது அடைந்து அதன்மேல் பண விரயம் உண்டாகும். அரசு வழியில் எடுக்கும் முயற்சிகள் தடையுடன் வெற்றி கொடுக்கும். புழு, பூச்சி தொல்லையால் பயிர்ச் சேதம் உண்டாகும்.
இளைஞர்களுக்கு:
தாழ்வான நிலை என்றாலும் எதிர்காலப் பலன்கள் நன்றாக இருக்கும். சோதனையைக் கண்டு அஞ்சாதீர்கள். பெரிய வாய்ப்பு களால் உயர்வு கிடைக்காது. வாய்ப்புகள் இருந்தால் சிறு வேலை யாக இருந்தாலும் எதிர்காலத்தில் நல்ல நிலையை அடைய முடியும்.
மாணவர்களுக்கு:
கவ்வியில் ஆர்வம் குறையும். கடின உழைப்பினை மேற்கொண் டால் ஓரளவு சாதகமான பலனை அடைய முடியும். தேர்வுகளில் மதிப்பெண்களை கஷ்டப்பட்டு பெறும் நிலை ஏற்படும். பெற்றோர், ஆசிரியர்கள் ஆதரவு ஓரளவு கிடைக்கும்.
குரு அஸ்வினி நட்சத்திரத்தில் கேது சாரத்தில்
8-5-2011 முதல் 17-7-2011 வரை சஞ்சாரம்
உங்களின் தேகநலனில் அதிக கவனம் செலுத்த வேண்டும். புத்திர வழியிலும் மருத்துவச் செலவுகள் உண்டாகும். மகிழ்ச்சி குறையும். எடுத்த காரியம் நிறைவேற கடுமையான முயற்சிகள் கையாளப்பட வேண்டும். சுறுசுறுப்பும் உண்மையான உழைப்பும் கொண்டவர்கள் ஓரளவு கஷ்ட நிலைமையைச் சமாளிப்பீர்கள். வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற துடிப்புடன் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் பின்னோக்கியே இழுக்கும். உத்தியோகம் மற்றும் குடியிருக்கும் இல்லத்தில் இருந்து வெளியேறி வேறு இடம் செல்லும் நிலை உண்டாகும். சக ஊழியர்களின் மனிதாபிமானமற்ற நடத்தைகளும் வஞ்சக சூழ்ச்சிகளும் கவலையை உண்டாக்கும். எனவே, மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. எதிலும் நிதானமாகச் செயல்பட வேண்டும்.
குரு பரணி நட்சத்திரத்தில் சுக்கிரன் சாரத்தில்
18-7-2011 முதல் 30-8-2011 வரை சஞ்சாரம்
உங்கள் தேக ஆரோக்கியம் சுமாராகவே இருக்கும். மருத்துவச் செலவுகள் சிறிது குறைந்து காணப்படும். நிறைய பொருள் வரவு வந்தபடியே இருக்கும். செலவுகள் ஏற்பட்டபடியே இருக்கும். இதனால் சிறிது பற்றாக்குறையும், கடன் வாங்குகின்ற நிலையும் உண்டாகும். குடும்ப வாழ்வில் நிம்மதி இருக்காது. காரியத் தடைகள் இருந்து கொண்டே இருக்கும். கணவன் - மனைவி இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும். புத்திர வழியில் செலவுகள் ஏற்படும். அரசு சம்பந்தப்பட்ட வேலைகள் சிறுசிறு தடையைக் கொடுக்கும். தொழில் ரீதியாக சிலருக்கு இட மாற்றம் உண்டாகும். தேவையில்லாத பிரச்சினை ஏற்படும். மாணவர்கள் கல்வியில் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு அதிக மதிப்பெண்களைப் பெறுவார்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் திருப்தியாக இருந்தாலும் எதிர்பார்த்த மகசூல் கிடைக்காது.
குரு வக்ர கதியில்
31-8-2011 முதல் 25-12-2011 வரை சஞ்சாரம்
உங்கள் உடல்நலம் அற்புதமாக இருக்கும். செல்வம், செல்வாக்கு, புகழ், பெருமைகள் யாவும் கூடுதலாகும். சுபகாரியம் செய்யும் முயற்சியில் பெரும் வெற்றியினைப் பெறுவீர்கள். சிலருக்கு பிள்ளைப் பேறு ஏற்படும். தொழில்ரீதியாக தூரப் பயணம் செல்லக் கூடிய அமைப்பும் அதன் மூலம் ஆதாயமும் உண்டாகும். வீடு வாங்கும் முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். வியாபாரிகளுக்கு நல்ல அபிவிருத்தியும் மேன்மையும் உண்டாகும். கொடுக்கல் - வாங்கலில் லாபகரமாக இருக்கும். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சிகரமான காரியங்கள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த காரியம் லாபகரமாக இருக்கும். கலைஞர் களுக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும். அரசியல்வாதிகளின் பெயர், புகழ் யாவும் உயரும்.
குரு அஸ்வினி நட்சத்திரத்தில் கேது சாரத்தில்
26-12-2011 முதல் 2-3-2012 வரை சஞ்சாரம்
உங்களின் தேகநிலை பாதிக்கும். எதிர்பார்த்த தனவரவுகள் கைக்கு கிடைக்காமல் தாமத நிலை ஏற்படும். எதிலும் விரயமான நிலையும் மன அமைதியை பாதிக்கக் கூடியதாகவும் அமையும். உங்களுக்கு தொழில்ரீதியாகவும் பொருள்ரீதியாகவும் சிற்சில சங்கடங்களை உண்டாக்கிடும். கொடுக்கல் - வாங்கலில் சில சிக்கல்களை ஏற்படுத் தும். கணவன் - மனைவி இடையே வாக்குவாதங்களும் சண்டை சச்சரவுகளும் ஏற்பட்டு மறையும். வெளியூர் பயணங்கள் அனுகூலத் தைக் கொடுக்காது. திருமணம் போன்ற சுபமான நல்ல காரியங்கள் யாவும் தள்ளிப்போகும். நண்பர்களும் உறவினர்களும் பகைவர் களாக மாறும் நேரம் என்றால் மிகையாகாது. மாணவர்கள் எவ்வளவு தான் கஷ்டப்பட்.டு படித்தாலும் கல்வியில் ஏற்றம் பெற முடியாத நிலையினை உண்டாக்கும். கலைஞர்கள் தற்போது பெரிய பெரிய போட்டிகளைச் சந்திக்கின்ற நிலையைப் பெறுவார்கள்.
குரு பரணி நட்சத்திரத்தில் சுக்கிரன் சாரத்தில்
3-3-2012 முதல் 2-5-2012 வரை சஞ்சாரம்
தேக ஆரோக்கியம் பாதிக்கும். உங்களுக்கு வீணான அலைச்சல், உடன் இருப்பவருடன் விரோதம் போன்ற அனுகூலமற்ற பலன்கள் உண்டாகும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். பொருள் வரவில் மிகவும் மந்தமான நிலை ஏற்படும். கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு அதிகமாகி சண்டை, சச்சரவுகள் காணப்படும். வெளியூர் பயணங்கள், தேவையில்லாத அதிக அலைச்சலை உண்டாக்கும். எடுக்கின்ற காரியங்கள் யாவும் சற்று தாமதம், தடையுடன் முடிவடையும். கூட்டுத் தொழிலினால் அதிக சங்கடமும் பகைமையும் உண்டாகும். பொருள் வரவில் தட்டுப்பாடான நிலை ஏற்படும். ஸ்பெகுலேஷனால் தன விரயங்கள் ஏற்படும். மங்கையருக்கு சுபகாரியம் நடக்க தடை ஏற்படும். வியாபாரிகளுக்கு அரசு உதவிகள் கிடைக்க தாமதமாகும். மாணவர்கள் எவ்வளவு படித்தாலும் நினைத்த மதிப்பெண்களைப் பெற முடியாது.
குரு கிருத்திகை நட்சத்திரத்தில் சூரியன் சாரத்தில்
3-5-2012 முதல் 17-5-2012 வரை சஞ்சாரம்
உங்கள் தேக ஆரோக்கியம் சுமாராக இருக்கும். மனைவியின் தேக ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். பொருள் வரவில் மந்தமான நிலைகளும் சிறுசிறு கருத்துவேறுபாடுகளும் சண்டை, சச்சரவு களும் உண்டாகியபடியே இருக்கும். புத்திர வழியினாலும் சிறிது மனவருத்தம் உண்டாகும். எதைக் கண்டும் அஞ்சாத மன உரம் வேண்டும். மாணவர்கள் எதையுமே தைரியமாகச் செய்ய வேண்டும். எதிர்நீச்சல் போட்டால்தான் ஏற்றம் பெற முடியும். எதிலும் ஈடுபடும் போது அதிக கவனம் தேவையாகும். சொந்த முயற்சியினால் படிப்படியான ஏற்றம் உண்டாகும். ஸ்பெகுலேஷன் சுமாரான நற்பலன்களையே ஏற்படுத்தும். கணவன் - மனைவி இடையே உறவு முறை சுமாராகத்தான் இருக்கும். தேவையில்லாத பயணத்தால் அலைச்சல்கள் வரும். கலைஞர்களும் மாணவர்களும் மிகவும் அக்கறையுடன் செயல்படுவது நல்லது.
விசாகம் 4-ஆம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு:
உங்களிள் தேகநலன் சிறிது பாதிக்கும். எடுக்கும் முயற்சியில் தடை, தாமதம் ஏற்படும். புத்திர வழியில் தேவையற்ற செலவுகள் உண்டாகும். பிறருக்கு வாக்குறுதி தருவதைத் தவிர்க்க வேண்டும். பயணங்களால் அலைச்சல் ஏற்படும். கணவன் - மனைவி இடையே சுமாரான ஒற்றுமை நிலவும். பொருள் வரவில் மந்தநிலை இருக்கும். கூட்டுத் தொழிலில் நிதானமாகச் செயல்பட வேண்டும்.
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு:
உங்களுடைய கஷ்டங்கள் படிப்படியாகக் குறையும். குடும்ப வாழ்வில் சிறிது மனநிம்மதிக் குறை ஏற்படும். பொருளாதாரரீதியாக தனவரவு திருப்தியாக இருக்காது. கணவன்-மனைவி ஒருவருக் கொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. புதிய முயற்சிகள் சிறிது தடை கொடுத்து வெற்றியைக் கொடுக்கும். அரசியல்வாதிகள், கலைஞர்கள் எதிலும் நிதானமாகச் செயல்படுவது நல்லது. மாணவர் களின் கல்வியில் மந்தநிலை நீங்கி ஓரளவு முன்னேற்றம் உண்டாகும்.
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு:
உங்களது தேகநிலையில் சிறுசிறு பாதிப்புகளைக் கொடுக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டியும் பொருள் வரவில் மந்தமும் இருக்கும். மாணவர்கள் கல்வியில் கவனம் தேவை. பெண்கள் நினைத்த காரியம் தாமத பலனைக் கொடுக்கும். கமிஷன் ஏஜென்சி, காண்ட்ராக்ட் போன்றவை லாபம் தராது. கூட்டுத் தொழில் சிறிது ஏற்றம் தரும். புது முயற்சியில் நிதானம் தேவை.
அதிர்ஷ்டம் அளிப்பவை:
அதிர்ஷ்ட தேதி : 5, 9, 14, 18, 23, 27.
அதிர்ஷ்ட கிழமை : செவ்வாய், புதன்.
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு.
அதிர்ஷ்ட கல் : பவளம்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு.
அதிர்ஷ்ட தெய்வம் : முருகன்.
பரிகாரம்:
இந்த குருப்பெயர்ச்சியால் குரு பகவான் 6-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு பாலாபிஷேகம் செய்வது, மஞ்சள் நிற வஸ்திரமும் பூக்களும், கொண்டைக் கடலை மாலையும் சாற்றி அர்ச்சனை செய்வது உத்தமம். ராகு, கேது 1, 7-ல் சஞ்சரிப்பதால் துர்க்கை வழிபாடு, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது உத்தமம். 15-11-2011 முதல் ஏழரைச் சனி தொடங்கவுள்ளதால் சனிக்கு பரிகாரம் செய்வது, திருநள்ளாறு சென்று வருவது நல்லது.