Friday, March 25, 2011

நாடி ஜோதிடம்


நடைமுறையில் உள்ள நாடி ஜோதிட முறைக்கும் உண்மையான நாடி ஜோதிடத்திற்கும் அதிகமான வித்யாசம் உண்டு. இந்த குழப்பத்தில் இருந்து விடுபட நாடி ஜோதிடத்திற்கும் மற்றும் ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள ஜோதிட முறைக்கும் வித்தியாசத்தை தெரிந்துகொள்வது அவசியம். ஜோதிட முறைக்கு சமஸ்கிருதத்தில் " பத்ததி " எனப் பெயர். பத்ததி என்றால் வழி அல்லது பாதை எனப் பொருள். பாரத தேசத்தில் எத்தனையோ பத்ததி முறைகள் இருந்தன. நடைமுறையில் சில பத்ததிகளே பயன்படுத்தப்படுகிறது. பிரபலமான சில பத்ததி என்றால் வடக்கில் கண்டுபிடிக்கப்பட்ட ஸ்ரீபத்ததி மற்றும் தெற்கில் கண்டுபிடிக்கப்பட்ட கிருஷ்ணமூர்த்தி பத்ததி ஆகியவையாகும்.

நாடிக்கும் பத்ததிக்கும் என்ன வித்யாசம் என்றால் நாடி என்பது ஜோதிட முறையில் உள்ள ஒரு யுக்தி [technique]. பத்ததி என்பது அடிப்படை கணிதம் முதல் பலன் சொல்லும் கட்டமைப்பு வரை என முழுமையான ஒரு வடிவம். எளிமையாக கூற வேண்டுமானால் பல சிறப்பான நாடி யுக்திகளை ஒருங்கே கொண்டது தான் பத்ததி. நாடிகளின் தோரணமே பத்ததி. நாடி ஜோதிட யுக்திகள் பாரத தேசத்தில் எண்ணில் அடங்காத அளவிற்கு கண்டுபிடிக்கப்பட்டு இருந்தது. பல ஜோதிட வல்லுனர்களை கொண்ட நாடாக இருந்ததால் சிறப்பான நாடி யுக்திகள் கண்டுபிடிக்கப்பட்டு அவை பத்ததிகளாக சிறந்து விளங்கின. பத்ததிகளாக தொகுக்கப்படாத நாடிகள் நாளடைவில் சிறப்பாக செயல்பட்டாலும் ஜோதிட உலகில் இருந்து மறைந்தன. நாடி ஜோதிட யுக்திகளை கண்டுபிடிப்பவர்கள் அந்த நாடி ஜோதிடத்தின் பெயரை தங்களுக்கு அடையாளப் படுத்துவதில்லை.

பல நாடி ஜோதிட யுக்திகளை கண்டுபிடித்தவர்கள் யார் எனத் தெரியாது. தனது உபாசன தெய்வம், சப்த ரிஷிகள் என அவர்களின் பெயரை சூட்டுவது இந்த ஆணவமற்ற கண்டுபிடிப்பாளர்களின் வழக்கமாக இருந்தது. நாடி யுக்திகள் பல நுணுக்கங்களை கொண்டதாக உருவாகப்பட்டன. கோச்சாரத்தை கொண்டு பலன் சொல்வது, ராசி தன்மைகளை மட்டும் வைத்து பலன் சொல்வது, நட்சத்திர பிரிவுகளை பன்மடங்குகளாக பிரித்து பலன் சொல்வது என ஜோதிட பலன் கூறுவதற்கு ஏற்ப நாடி யுக்திகள் கண்டுபிடிக்கப்பட்டன. நாடி ஜோதிடத்தை நாடி நூல்களாக எழுதியவர்கள் கட்டுரை வடிவில் எழுதாமல் உரையாடல் வடிவில் எழுதினார்கள். இதனால் குரு இல்லாத நிலையிலும் எளிமையாக நாடி ஜோதிடத்தை அனைவரும் கற்றுக்கொள்ள முடிந்தது.

நாடி ஜோதிட நூல்களில் உள்ள உரையாடல்கள் குரு - சிஸ்யனுக்கும், சிவனுக்கும் - பார்வதிக்கும், இயற்கைக்கும் - மனிதனுக்கும் இடையே உள்ள உரையாடல்கள் ஆகும். குமார சாமியம் எனும் நூல் இதைப்போன்று ஜோதிடத்தில் தொகுக்கப்பட்டுள்ள ஒரு நூல். காலசக்கர நாடி எனும் நூல் அன்னப்பறவைக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள உரையாடல் ஆகும். தான் எழுதினோம் என்ற அகந்தை இல்லாமல் இருக்க கடவுளின் பெயரிலோ, இயற்கையின் அமைப்பிலோ எழுதிய இந்த ஜோதிட வல்லுனர்களுக்கு என்றும் நாம் கடமைப்பட்டு இருக்கிறோம்.

நாடி ஜோதிட முறையில் எத்தனையோ ஜோதிட முறைகள் இருந்தாலும் எனக்கு தெரிந்த சில நாடி ஜோதிட முறைகளை உங்களுக்காக வரிசைப்படுத்துகிறேன்.
1. சப்த ரிஷி நாடி
2. சந்திரகலா நாடி
3. மீனா நாடி
4. பிருகு நாடி
5. சிவ நாடி
6. நந்தி நாடி
7. கால சக்கர நாடி
8. கணேச நாடி
9. சூரிய நாடி
10. சந்திர நாடி
11. அங்கார நாடி
12. புதன் நாடி
13. குரு நாடி
14. சுக்கிர நாடி
15. சனி நாடி.

மேலே குறிப்பிட்ட நாடிமுறைகள் சிறந்த நாடிஜோதிட முறைகளில் முக்கியமானவைகளாகும். சந்திர கலா நாடி, மீனா நாடி ஆகியவற்றின் கருத்துக்களை உள்ளடக்கியதுதான் கிருஷ்ணமூர்த்தி பத்ததி. சப்த ரிஷி நாடி என்பது கிரகங்கள் ஆட்சி ஆதிக்கத்தை பொறுத்து பலன் சொல்லும் முறையாகும். சந்திரகலா நாடி நட்சத்திரத்தை பல பகுப்புகளாக பிரித்து நுணுக்கமான முறைகளை கொண்டது. ஜோதிடராக உருவாவதற்கு ஒரு நாடி முறையை மட்டுமே படித்து செயல்படுத்துவது சிரமம். அனைத்து நாடி முறை யுக்திகளை கருவிகளாக பயன்படுத்தினால் மட்டுமே ஜோதிட பலன்கள் சிறப்பாக வரும். உதாரணமாக மேலே குறிப்பிட்ட பதினைந்து நாடி ஜோதிட முறைகளும் பிறப்பு ஜாதகத்தை அடிப்படியாகக் கொண்டு பலன் சொல்ல உருவாகப்பட்டவை. பிறப்பு ஜாதகம் இல்லாதவர்களுக்கு பலன் சொல்லுவது கடினமான ஒன்று. அதற்காக உருவாக்கப்பட்டது காசிபநாடி.

சப்த ரிஷிகளில் ஒருவரான காசிப முனிவர் இயற்றியதாக சொல்லப்பட்டலும் இந்த முறை கிரக ஹோரைகளை கொண்டு பலன் சொல்லும் ப்ரசன்ன ஜோதிட முறையாகும். இந்த முறை தவிர பிறப்பு ஜாதகம் இல்லாதவர்களுக்கு பலன் கூற தோன்றிய முறை தான் கட்டை விரல் ரேகையை கொண்டு ஜாதகம் கண்டுபிடிக்கும் முறையாகும். ப்ரசன்ன முறையான இந்த முறை பதிலை பெற்று நாடி ஜோதிடம் என்றாலே இது மட்டும் தான் என்ற எண்ணத்தை உருவாக்கிவிட்டது. ஜாதகம் பார்க்கும் நுணுக்கங்களை சிறப்பாக கற்று பயிற்சி செய்யும்பொழுது அந்த ஜோதிட ஆய்வாளரின் அறிவுக்கும், சீரிய சிந்தனைக்கும் விடையாக சில சூட்சுமங்கள் தோன்றுவதுண்டு. அந்த எளிய முறையை பல ஜாதகத்தில் ஆராய்ந்து பல கோண ஆய்வுக்கு உட்படுத்தி சிறப்பான வடிவத்தை கொடுத்தால் அது நாடி என அழைக்கலாம். எனவே நீங்களும் ஆராய்து சிறந்த நாடியை உருவாக்கும் சாத்தியம் உண்டு.

நாடி ஜோதிடத்தை இரு வகையாக பிரிக்கலாம். விஞ்ஞானப் பூர்வமானது மற்றும் விஞ்ஞானத்திற்கு அப்பாற்பட்டது. விஞ்ஞான பூர்வமான நாடிகளுக்கு அடிப்படை விதிகள் கட்டமைப்புகள் என முறைபடுத்தப்பட்ட சட்ட திட்டம் உண்டு. இவ்வகையான நாடி முறைகளை கற்றவர் எவரும் குறுகிய காலத்தில் சிறப்பான பலன் கூறமுடியும். விஞ்ஞானத்திற்கு அப்பாற்பட்டவை என கூறப்படும் நாடி ஜோதிட முறைகள் பழங்காலம் முதல் அனுபவத்தால் வருவதாகும். சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாடி ஜோதிடரை தொடர்பு கொள்ளும்பொழுது அவர் சில நாடி நுணுக்கங்களை பகிர்ந்து கொண்டார். சந்திரனுக்கு நான்காம் பாவகத்தில் செவ்வாய் - சனி சேர்க்கை இருந்தால் ஜாதகர் வீட்டிற்கு முன் ஒரு புளிய மரம் இருக்கும் என்றார். கிருஷ்ணமூர்த்தி முறை போன்ற விஞ்ஞான ஜோதிடத்தை கற்ற எனக்கு இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சந்திரனுக்கு நான்கில் செவ்வாய், சனி என்றால் இந்த அமைப்பு 2 1/4 நாளுக்கு அமையும். இந்த காலகட்டத்தில் பிறக்கும் அனைவருக்கும் வீட்டிற்கு முன்பு புளியமரம் இருக்குமா? என ஒரு சந்தேகம் ஏற்பட்டது. புளியமரம் இருப்பவர்களின் ஜாதகத்தில் இந்த அமைப்பு இருப்பதை சில ஆய்வுகளுக்கு பிறகு உறுதி செய்தேன். இது போல அந்த நாடி ஜோதிடர், வீட்டின் அமைப்பு வீட்டிற்கு முன்பு உள்ள கட்டடங்களின் லட்சணம் என பலவற்றை கூறும் நாடி விதிகளை பகிர்ந்தாலும் அனைத்தும் விஞ்ஞான ரீதியாக அமையவில்லை. அனுபவ ரீதியாக வருவதால் இவற்றை ஏற்றுக்கொள்ளாமலும் இருக்க முடிவதில்லை. இந்த அறிவார்ந்த கேள்விகளை தவிர்த்துவிட்டு பயன்கூற முடியும் அளவில் உள்ள எந்த நாடி விதிகளையும் ஏற்றுக்கொள்வது புத்திசாலித்தனமாகும்.

நமது நோக்கம் துல்லியமாக பலன் கூறுவது மற்றும் சிறந்த ஜோதிட செயல்களை செய்வது என்னும் பொழுது நாடிஜோதிட யுக்திகளை அறிவியலா, அறிவியலுக்கு அப்பாற்பட்டதா என ஆராய்வது சிறப்பானது அல்ல. நாடி முறைகளை கண்டுபிடிக்கும் அளவுக்கு நாம் உயர்வடைந்தால் மட்டுமே இதுபோல ஆய்வு செய்ய தகுதி உடையவர்களாகிறோம். ஆணவமும் எதிர்பும் அற்ற நிலையில் உயர்ந்த ஆன்மீக நிலையிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட நாடிகளை ஆராய்ந்து விமர்சனம் செய்ய நாமும் அந்த தகுதியை பெற வேண்டும். நாடியை ஆய்வு செய்யும் தகுதி வருவதற்கு என்ன செய்ய வேண்டும்? திரு மூலர் சொல்லுவதை கேளுங்கள்.

நாடியின் ஓசை நயனம் இருதயம்
தூடி அளவும் சுடர்விடு சோதியைத்
தேவருள் ஈசன் திருமால் பிரமனும்
ஓவற நின்றங்கு உணர்ந்து இருந்தாரே

நவக்கிரக மந்திரங்கள்





சூரியனின் மந்திரம் :
ஜபா குஸீம சங்காசம்
காச்யபேயம் மஹாத்யுதிம்
தமோரிம் ஸர்வ பாபக்னம்
பரணதோஸ்மி திவாகரம்



சந்திரன் மந்திரம் :
ததிசங்க துஷாராபம்
ஷீரோ தார்ணவ ஸம்பவம்
நாமம் சசிநம் ஸோமம்
சம்போர் மகுட பூஷணம்


செவ்வாய் மந்திரம் :
தரணீ கர்ப்ப ஸம்பூதம்
வத்யுத்காந்தி ஸமப்ரம்
குமாரம் சக்தி ஹஸ்தம் ச
மங்களம் ப்ரணமாம்யஹம்

புதன் மந்திரம் :
ப்ரியங்கு கலிகா ஸ்யாமம்
ரூபேணாப்ரதிமம் புதம்!
ஸௌம்யம் ஸௌம்ய குணோபேதம்
தம்புதம் பிரணமர்மயஹம்


குருவின் மந்திரம் :
தேவா நாஞ்ச ரி(ரீ)ணாஞ்ச
குரும் காஞ்சந ஸ்ந்(நி)பம்
புத்திதம் த்ரிலோகேஸம்
தம் நமாமி ப்ருஹஸ்பதிம்


சுக்கிரன் மந்திரம் :
ஹிமகுந்த ம்ருணாளாபம்,
தைத்யாநாம் பரமம் குரும்
ஸர்வசாஸ்த்ர ப்ரவக்தாரம்
பார்கவம் ப்ரணமாம்யஹம்

சனி மந்திரம் :
நீலாஞ்ஜந ஸமாபாஸம்
ரவிபுத்ரம் யமாக்ரஜம்
ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம்
தம் நவாமி சநைச்சரம்


இராகுவின் மந்திரம் :
அர்த்காயம் மஹாவீர்யம்
சந்த்ராதித்ய விமர்தநம்!
ஸிம்ஹிகா கர்ப்பஸம்பூதம்
தம் ராஹூரும் ப்ரணாம்யஹம்

கேது மந்திரம் :
பலாச புஷ்ப ஸ்ங்காஸம்
தாரகா க்ரஹ மஸ்தகம்
ரௌத்ரம் ரௌத்ராத்மகம் கோரம்
தம் கேதும் ப்ரணமாம்யஹம்!



10 திருமண பொருத்தத்தின் விபரம்



1.தினப்பொருத்தம்:


தினம் என்றால் நட்சத்திரம் எனப் பொருள். நாள் தோறும் சந்திரபகவான் தங்கும் இடம் அல்லது ஷேத்திரம். அதுவே நாள் ஷேத்திரம் இது மருவி நட்சத்திரம் என ஆகியது. எனவே இந்த தினப்பொருத்தம் முக்கியமான ஒன்று. நட்சத்திரங்கள் 27 ஆகும்.

2.கணப்பொருத்தம்:


கணம் என்றால் கூட்டம் என பொருள்படும். மூன்று வகை கணங்களாக அல்லது கூட்டமாக 27 நட்சத்திரங்களும் பிரிவினை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் இருவரின் இல்லற சுகம், ஒற்றுமை இவை தீர்மானிக்கப்படும். தேவ கணம் & மனுஷ கணம் & ராட்சஸ கணம் என மூன்று வகைப்படும். தேவம் & அசுவினி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், அஸ்தம், சுவாதி, அனுசம், திருஓணம், ரேவதி மனுஷம்& பரணி, ரோகிணி, திருவாதிரை, பூரம், உத்திரம், பூராடம், உத்திராடம், பூரட்டாதி, உத்திரட்டாதி ராட்சஸம்& கார்த்திகை, ஆயில்யம், மகம், சித்திரை, விசாகம், கேட்டை, மூலம், அவிட்டம், சத்யம் தேவ கணத்தினருக்கு மனோபலம் உண்டு. ராட்சஸ கணத்தோர் உடல் பலம் மிக்கவர். மனுஷ கணம் இருபலரும் உண்டு. பெண்& ஆண் நட்சத்திரங்கள் ஒரே கணமெனில் உத்தமம். இரண்டில் ஒன்று தேவகணமும் மற்றும் மனுஷ கணமெனில் உத்தமம். பெண் தேவகணம் & ஆண் ராட்சஸ கணமெனில் மத்திமம், பெண் ராட்சஸ கணம் & ஆண் தேவகணம் பொருத்தமில்லை. பெண் ராட்ச கணம் & ஆண் மனுஷ கணம் பொருத்தமில்லை.

3.மகேந்திர பொருத்தம்:

புத்திம விருத்தி தரும் பொருத்தம் இரு பெண்ணின் நட்சத்திரம் தொட்டு ஆண் நட்சத்திரம் வரை எண்ணிய தொகை 4, 7, 10, 13, 16, 19, 22, 25 ஆவது எனில் மகேந்திர பொருத்தம் உண்டு எனலாம். மற்றவை பொருத்தமில்லை. இப்பொருத்தம் அவசியமே. ஆனால் முக்கியமானது அல்ல. இப்பொருத்தம் இல்லையெனில், ஜாதகங்களில் புத்திரஸ்தான பலனைக் கொண்டு ஜோதிடர் தீர்மானிப்பார்.

4.ஸ்த்ரீதீர்க்கம் பொருத்தம் :
பெயரே சொல்கிறது. பெண்ணின் தீர்க்கம் அல்லது ஆயுள், ஆரோக்கியம் ஆணின் நட்சத்திர தொடர்பால் எவ்விதம் மாறுபாடு அடைகிறது. என்பதை சொல்லும்! பெண் நட்சத்திரம் தொட்டு ஆண் நட்சத்திரம் ஏழுக்குள் எனில் பொருத்தம் இல்லை. ஏழுக்கு மேல் பதிமூன்று வரை எனில் மத்திம பொருத்தமே. பதிமூன்றுக்கு மேல் என்றால் உத்தமம். இப்பொருத்தம் இல்லையெனிலும் பெண் ஜாதகத்தின் ஆறாம் ஸ்தானம் அல்லது எட்டாம் ஸ்தானம் அல்லது ஆண் ஜாதகத்தில் பணிரெண்டாம் ஸ்தானம் அல்லது இரண்டாம் ஸ்தான பலம் மூலம் ஜோதிடர்கள் தீர்மானிக்க இயலும்.


5.யோனிப் பொருத்தம் :

இது முக்கியமான ஒன்றாகும். தாம்பத்ய உறவின் சுகம், திருப்தி நிலை இவற்றை தீர்மானிக்கும் அளவுகோள் எனலாம். ஆண், பெண் யோனி நிலையை மிருகங்களாக உருவகம் செய்து பொருத்தம் பார்க்கும் முறை இது. நட்சத்திரங்கள் 13 மிருகங்களாக ஆ& பெண் என பிரிக்கப்பட்டு உள்ளது. உத்திராடட்ம நட்சத்திரம் மட்டும் கீரி எனவும் சில சாஸ்திர நூல்கள் மலட்டு பசு எனவும் சொல்கின்றன. ஒவ்வொரு மிருகத்திற்கும் பகை மிருகம் உண்டு. ஆண்&பெண் பகை மிருகமெனில் மட்டுமே பொருத்தமில்லை எனலாம். ஆணிற்கு ஆண் மிருகமும், பெண்ணிற்கு பெண் மிருகம் எனினும் உத்தமே! பெண்ணிற்கு ஆண் மிருகமும், ஆணிற்கு பெண் மிருகம்' என்றாலும் உத்தமமே. பகை மிருகம் மட்டும் சேர்க்கக்கூடாது. மற்ற பொருத்தம் எத்தனை இருந்தாலும் இது முக்கியம்.

6.ராசிப் பொருத்தம் :

பெண் ராசி தொட்டு ஆண் ராசி 6 க்கு மேல் எனில் பொருத்தம் உண்டு என்கிறது சாஸ்திரம். ஆனால் அனுபவத்தில் ஒரே ராசியெனில் உத்தமமே! ஆனால் நட்சத்திரம் மாறுபட்டு இருக்க வேண்டும்! எனவே பெண் ராசி தொட்டு 2, 3, 4, 5 மற்றும் 6ம் ராசி எனில் பொருத்தமில்லை. அதே போல் எண் ராசி தொட்டு ஆண் ராசி எட்டு எனினும் பொருத்தம் அதிகம் இல்லை. எனவே பெண் ராசி முதல் ஆண் ராசி 1, 7, 9, 10, 11, 12 ஆகிய 6 ராசிகள் பொருந்தும் எனலாம். இதன் அட்டவணை.


7.ராசி அதிபதி பொருத்தம் :

பனிரெண்டு ராசிகட்கு அதிபதி உண்டு. அந்த அதிபதி கிரகத்திற்கு நட்பு, சமம், பகை என மூன்று வகையால் மற்ற கிரகங்களுடன் உறவும் உண்டு. பெண்ணின் ராசி அதிபத, ஆணின் ராசி அதிபதிக்கு பகை என்று உறவு எனில் மட்டுமே பொருத்தமில்லை. நட்பு, சமம் எனில் பொருத்தம் உண்டு.

8.வசிய பொருத்தம் :

இப்பொருத்தம் கணவன் & மனைவி அன்னியோன்ய உறவை குறிகாட்டும். ஒரு ராசிக்கு ஒன்று அல்லது இரண்டு ராசிகளே வசியமாக அமையும். இது அமைந்தால் இன்னம் சிறப்பாகும். மற்றபடி இப்பொருத்தம் இல்லை எனினும் அட்டவணை இதோ.

9.ரஜ்ஜீ பொருத்தம் :

சரசோதிமலை எனும் தமிழ் ஜோதிட காவியம் இவ்வித பத்து பொருத்தங்களினால் உண்டாகும் பலன் எவை என குறிப்பிடும் சமயம் "இரச்சுமங்கலியங்" என தெளிவாக சொல்கிறது. இவ்விருவர் இணைவால் உண்டாகும் திருமண வாழ்வின் நீண்ட, மத்திம குறுகிய ஆயுளை ரச்சு பொருத்தம் தீர்மானிக்கிறது. இதை நாட்டு புற வழக்கில் சரடு பொருத்தம் என்றும் கூறுவார்கள். இந்த சாஸ்திரத்தின் படி, மிகவும் புனிதமாக ஏற்கப்பட்டுள்ள திருமாங்கல்ய கயிறு&அதன் ஆயுளை தீர்மானிப்பதால் இது முக்கியமாக ஏற்கப்படுகிறது. ஏனைய பொருத்தம் அமைந்த இந்த ரச்சு எனும் மாங்கல்ய சரடு பொருத்தம் இல்லையெனில் நன்மையில்லை. ஏனைய பொருத்தம் அதிகம் இல்லாமல் ரச்சு மட்டுமே பலமாக அமைந்தால் கூட சுகவாழ்வில் சிக்கல் வந்தாலும் திருமண வாழ்வின் ஆயுள் நீண்டு அமையும். கூடி அமைந்த காதல் திருமணங்கள் தோல்வியை அடைவது ரச்சு பொருத்தம் காரணம் என்பது எமது அனுபவம் இனி இது உண்டாகும் என பார்வை செய்வோம். நட்சத்திரங்கள் ஐந்து வகை ரச்சு என பிரிக்கப்பட்டு உள்ளன. அவை பாதம், தொடை, உதரம், கண்டம் சிரசு எனப்படும். ஆண்& பெண் ஒரே ரச்சுவாக இருக்கக்கூடாது

10.வேதைப் பொருத்தம்:

வேதை எனும் சொல்லுக்கு துன்ப நிலை என பொருள்படும். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரே ஒரு நட்சத்திரம் வேதையாக அமையும். இவ்வித வேதை நட்சத்திரம் ஒரே ரச்சுவாக ரச்சு பொருத்தம் இல்லாத நட்சத்திரமாகவே அமையும். ரச்சு பொருத்தம் குறுகிய கால மணவாழ்வு கூட சந்தோஷமாக அமைந்து முடியலாம். ஆனால் வேதை நட்சத்திரம் இணைந்தால் அந்த குறுயி கால மண வாழ்வும் துன்பமாகவே அமையும்.

கைரேகை பலன்கள்:


கைரேகை பலன்கள்:
பொதுவாக கைரேகை பலன் அறிய ஆண்களுக்கு வலக் கை ரேகையையும் பெண்களுக்கு இடக் கை ரேகையையும் பார்க்க வேண்டும் என கைரேகை நிபுணர்கள் கூறி வருகின்றனர் என்பது யாவரும் அறிந்ததே! ஆனால் எமது ஆய்வின்படி, இரண்டு கைகளின் ரேகையையும் பார்த்துத்தான் துல்லியமாக பதில் கூற முடியும். ஆண்களுக்கு இடக் கை ரேகையையைப் பார்த்து 40 வயதிற்கு முன்னால் நடந்த பலன்களையும், வலக் கை ரேகையையைப் பார்த்து 40 வயதிற்கு பிறகு நடக்கப் போகிற பலன்களையும் கூற வேண்டும். அதுபோல் பெண்களுக்கு வலக் கை ரேகையையைப் பார்த்து 40 வயதிற்கு முன்னால் நடந்த பலன்களையும், இடக் கை ரேகையையைப் பார்த்து 40 வயதிற்கு பிறகு நடக்கப் போகிற பலன்களையும் கூற வேண்டும். ஓர் ஆடவரின் இடக் கையில் உள்ள ரேகைகளும், மேடுகளும் பலவீனமாக இருக்க, அவரது வலக் கையில் உள்ள ரேகைகளும், மேடுகளும் பலமாக இருந்தால், அவர் 40 வயது வரை பலவிதமான கஷ்டங்களை அனுபவித்து, அதற்கு பிறகு படிப்படியாக தனது வாழ்வில் போராடி வெற்றியடைந்து, நல்ல நிலைமையை அடைவார் எனக் கூற வேண்டும். இரண்டு கைகளில் உள்ள ரேகைகளும், மேடுகளும் பலமாக இருந்தால் அந்த நபர் வாழ்நாள் முழுவதும் நல்ல சந்தோஷமான வாழ்க்கையைப் பெறுவார் என்பது எமது அனுபவத்தில் கண்ட உண்மையாகும். மிகவும் துல்லியமாக ஆராய்ந்து பார்த்தால், ஆண்களுக்கு வலக் கை ரேகை சிறப்பாக இருக்க, இடக்கை ரேகை அம்சங்கள் பலவீனமாக இருந்தால் இவர்களுக்கு 2/3 பங்கு சுப பலனும் 1/3 பங்கு பாவ பலனும் உண்டாகும் என அறிய வேண்டும். இவ்வாறு பெண்களுக்கு இருந்தால் 1/3 பங்கு சுப பலனும் 2/3 பங்கு பாவ பலனும் உண்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது ஆண்களுக்கு வலக் கை ரேகையையும், பெண்களுக்கு இடக் கை ரேகையையும் அதிக சக்தி வாய்ந்தது.

விதி ரேகை:
உள்ளங்கையில் மணிக்கட்டு பகுதியில் இருந்து ஒரு ரேகை சனி மேட்டை நோக்கிச் செல்லும். இதுவே விதி ரேகை ( அ) தொழில் ரேகை என்று அழைக்கப்படும். இந்த ரேகை நமது உழைப்புக்குத் தகுந்த பலனைக் கொடுக்கக் கூடியது எனலாம். சிலர் கைகளில் இந்த ரேகையே இருக்காது! இவர்கள் எவ்வளவு தான் கஷ்டப்பட்டுப் பாடுபட்டாலும், அதற்குத் தகுந்த பலன் கிடைக்காது. விதி ரேகை தெளிவாக அமைந்து வெட்டுக்குறி, தீவு ஏதும் இல்லாது மணிக்கட்டிலிருந்து சனி மேடு வரை செல்வது நல்ல அமைப்பாகும். இவர்கள் வாழ்நாள் முழுவதும் தொழில் விஷயத்தில் பிரச்சனை ஏதும் இல்லாது நிம்மதியாக வாழ்வர். விதி ரேகையுடன் ஆயுள், புத்தி, இருதயரேகைகளும் நன்றாக அமைந்திருந்தால், இவர்களுக்கு நல்ல தேக ஆரோக்கியமும் , புத்திசாலித்தனமும் , நல்ல தொழில் விருத்தியும் ஏற்பட இடமுண்டு. இவர்களது எதிர்காலம் சந்தோசமாக அமையும்.

ஆயுள் ரேகை:
ரேகைகளில் மிகவும் முக்கியமானது ஆயுள் ரேகையாகும். முதலில் இதன் தன்மையைக் கவனிக்க வேண்டும். இந்த ரேகை சிலரது கைகளில் தடிமனாகவும். ஆழமாகவும் பதிந்திருக்கும்; சிலரது கைகளில் லேசாகவும் மெல்லியதாகவும் பதிந்திருக்கும். தடிமனான ஆயுள் ரேகை மிருகபலத்தையும், மெல்லிய ஆயுள் ரேகை ஆத்ம பலத்தையும் குறிப்பிடும். தெளிவாகவும், மெல்லியதாகவும், நீளமாகவும் அமைந்த ஆயுள் ரேகை, ஒருவருக்கு நல்ல தேக பலத்தையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கும். தடிமனான ஆயுள் ரேகை உடையோர் அடிக்கடி சிறு, சிறு உடல் உபாதையால் சிரமப்படுவர். அடுத்து, ஆயுள் ரேகை சுக்கிர மேட்டைச் சுற்றி எவ்வாறு அமைந்துள்ளது என்பதை ஆராய வேண்டும், ஆயுள் ரேகை சுக்கிர மேட்டைச் சுற்றி நன்கு விலகியிருந்தால், இவர்களது தேக ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஆயுள் ரேகை, சுக்கிர மேட்டைச் சுற்றி நெருங்கிக் காணப்பட்டால், இவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருக்கும் என்பதை இது குறிக்கும். ஆயுள் ரேகை குரு மேட்டுப் பக்கம் சற்று உயர்ந்து காணப்பட்டால், இவர்கள் தன்னடக்கம், கட்டுப்பாடு, லட்சிய உணர்வு, உயர்வெண்ணம் கொண்டவர்களாக இருப்பர். ஆயுள்ரேகை கீழ் செவ்வாய் மேட்டிலிருந்து ஆரம்பித்திருந்தால், இவர்கள் உணர்ச்சிவசப்படக்கூடியவர்களாகவும், அடக்கமில்லாதவர்களாகவும், சண்டை சச்சரவுகளில் ஈடுபடக்கூடியவர்களாகவும் இருப்பர். ஆயுள் ரேகையிலிருந்து மேல் நோக்கி எழும் ரேகைகள் சிறியதாக இருந்தால், இவர்கள் நல்ல உழைப்பு, உற்சாகம், அதிர்ஷ்டம் உடையவர்களாக இருப்பர் என்பதைக் காட்டும்.

புத்தி ரேகை:
குரு மேட்டின் அடிப்பகுதியில் ஆயுள் ரேகையை ஒட்டி ஆரம்பமாகி, உள்ளங்கையில் குறுக்காக செவ்வாய் மேடு (அ) சந்திர மேட்டை நோக்கிச் செல்லும் ரேகை புத்தி ரேகை என்று அழைக்கப்படும். இந்த ரேகை ஓரளவு அழுத்தமாகவும், தெளிவாகவும் , மெல்லியதாகவும் இருந்து தீவு, புள்ளி, உடைதல், போன்ற குறைபாடுகள் இல்லாது அமைவது நல்ல அமைப்பாகும். இவர்கள் புத்திசாலியாகவும் , அதிக ஞாபக சக்தி உடையவர்களாகவும், நேர்மையாகவும் இருப்பர். புத்தி ரேகை நீளமாக அமைந்திருந்தால், இன்னும் விசேஷமான பலனைத் தரும். புத்தி ரேகை நமது மூளையின் அமைப்பையும், அது வேலை செய்யும் திறனையும், நமது மனோநிலையையும் எடுத்துக் காட்டுகிறது! உள்ளங்கையில் காணப்படும் முக்கியமான ரேகைகளில் இதுவும் ஒன்றாகும். இனி, புத்தி ரேகையின் பலவிதமான அமைப்புகளையும், அவை தரும் பலாபலன்களையும் பற்றி விரிவாகக் காண்போம்.

ஆரோக்கிய ரேகை:
ஆரோக்கிய ரேகையைப் புதன் ரேகை என்று கூறுவது உண்டு. இது விதி ரேகையின் அருகே ஆரம்பித்து புதன் மேடு வரை செல்லும். ஒருவரது உடல் நிலை எவ்வாறு உள்ளது என்பதை இந்த ரேகை எடுத்துக் காட்டும். உள்ளங்கையில் உள்ள மற்ற ரேகைகளான புத்திரேகை, ஆயுள் ரேகை, இருதய ரேகை ஆகியவற்றில் ஏதாவது குறைபாடு இருந்தாலும், இந்தப் புதன் ரேகை நன்றாக அமைந்திருந்தால், இவர்களது தேகத்தில் ஏதாவது பீடைகள் வந்தாலும், அவையெல்லாம் உடனடியாக நிவர்த்தியாவதற்கு இது உறுதுணையாக இருக்கும். மேலும், புதன் மேடு பலவீனமாக இருக்க, இந்த ரேகை பலமாக இருந்தால் புதன் மேட்டால் ஏற்படும் குறைபாடுகள் யாவும் விலகி விடும். இந்த ரேகை தெளிவாகவும், மெல்லியதாகவும், ஓரளவு அழுத்தமாகவும் இருப்பது நல்லது. தீவு, பிளவு, வெட்டுக்குறி, சங்கிலிக் குறி போன்ற குறைபாடுகள் ஏதும் இல்லாது இந்த ரேகை அமைந்திந்தால் இவர்கள் நல்ல பேச்சு சாதூர்யம், சொல்வன்மை கலை ë£னம், வியாபரத்திறமை ஆகியவற்றுடன் பெரும் பணம் சம்பாதித்து சிறப்பாக வாழ்வர்.

இருதய ரேகை:
உள்ளங்கையில் காணப்படும் முக்கியமான ரேகைகளில் இதுவும் ஒன்றாகும். இந்த ரேகை புதன் மேட்டில் உற்பத்தியாகிச் சூரிய மேடுகளைத் தாண்டி குரு மேட்டில் முடியும். சிலருக்கு இந்த இருதய ரேகை சனி மேட்டில் முடியும்; (அ) கிரக மேடுகளுக்கு வெகுவாக கீழே தள்ளிப் புத்திரேகையை ஒட்டியும் முடியலாம். சிலர் கைகளில் புத்தி ரேகை, இருதய ரேகை ஆகிய இரண்டும் சேர்ந்து, உள்ளங்கையில் குறுக்கே ஒரே ரேகையாகவும் காணப்படலாம். இந்த இருதய ரேகை மூலம் நமது இருதயம் எவ்வாறு வேலை செய்கிறது என்பதையும், இருதயத் துடிப்பு இரத்த ஓட்டம் போன்றவற்றையும் தெரிந்துகொள்ளலாம். அத்துடன் இருதயத்தில் ஏற்படக் கூடிய கோளாறுகளையும் தெரிந்து கொள்ளலாம். மேலும், இந்த ரேகை மூலம் அன்பு, பாசம், தயை, காருண்யம், காதல் போன்ற உணர்வுகள் எந்த அளவில் உள்ளன என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.